SA vs BAN, 2nd Test: எல்கர், பவுமா அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எர்வீ 24 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கீகன் பீட்டர்சனும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.
எல்கர் 70 ரன்னிலும், பீட்டர்சன் 64 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் டெம்பா பவுமாவும் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 67 ரன்கள் அடித்தார் பவுமா. மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கல்ட்டான், 42 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் கெய்ல் வெர்ரெய்ன் 10 ரன்களுடனும், வியான் முல்டர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், கலீத் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.