முதலில் அவர் ஏதேனும் சாதிக்கப்பட்டும் - உம்ரான் குறித்து சல்மான் பட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அதிரடியான துவக்கத்தை பெற்றுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று, 1 – 0* என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜூன் 12இல் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெறும் 2ஆவது போட்டியில் எப்படியாவது வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா போராட உள்ளது. முன்னதாக டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்துகளை அசால்டாக வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான போட்டிகளில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கியதாலும் ஹர்ஷல் படேல் போன்ற சீனியர் பவுலர்கள் இருப்பதாலும் எதார்த்த அடிப்படையில் உம்ரானுக்கு பொறுமையாகத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துவிட்டார்.
இருப்பினும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சிறிய ஊரில் பிறந்து இந்த வயதிலேயே இவ்வளவு கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு சமீபத்திய ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் வெறித்தனமாக பந்து வீசினார். கடந்த 2021இல் தமிழகத்தின் நடராஜன் காயமடைந்ததால் கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் பொன்னாக மாற்றிய அவர் 145 கி.மீ வேகத்தில் வீசி அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளைப் பெற்றார்.
அதனால் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு சற்றும் யோசிக்காமல் தக்கவைத்த ஹைதெராபாத் நிர்வாகத்திற்கு இந்த வருடம் பங்கேற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்த அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டார்.
அதிலும் இந்த வருடம் வேகத்தை அதிகப்படுத்திய அவர் 150 கி.மீ வேகப்பந்தை தொடர்ச்சியாகவும் அசால்டாகவும் வீசியதால் சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, பிரெட் லீ என பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை அள்ளினார். குறிப்பாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். மேலும் ஹைதராபாத் பங்கேற்ற 14 போட்டிகளிலும் அதிவேகமான பந்துகளை வீசி அதற்கான ஸ்பெஷல் விருதாக 14 லட்சங்களையும் வென்றார்.
இந்த வயதிலேயே இவ்வளவு மிரட்டும் இவர் நிச்சயமாக வரும் காலங்களில் 161.3 கி.மீ பந்தை வீசி உலகிலேயே அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்துள்ள பாகிஸ்தான் நட்சத்திரம் சோயப் அக்தரின் உலக சாதனையை உடைப்பார் என்று பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சொல்லப் போனால் தமது சாதனையை உம்ரான் மாலிக் உடைத்தால் மிகவும் மகிழ்ச்சி என்று சோயப் அக்தரே சமீபத்தில் உம்ரானை பாராட்டியிருந்தார்.
மேலும் அசால்டாக வேகத்தில் மிரட்டும் அவரை தினம்தோறும் நிறைய பேர் அக்தருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஆனால் முதலில் உம்ரான் மாலிக் ஏதாவது சாதிக்கட்டும் அதன்பின் அவரை அக்தருடன் ஒப்பிடுங்கள் என்று கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதற்கு முன் தேவையற்ற ஒப்பீடுகளை செய்து வளர்ந்து வரும் இளம் வீரரான அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உம்ரான் மாலிக்க்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று எனக்கு புரியவில்லை. புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த சீனியர்களுக்கு ஓய்வளித்து தனித்துவமான உம்ரானுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் ஆச்சரியத்தை கொடுக்கும் வகையிலான வேகத்தில் வீசுவார். அந்த இருவரைப் பற்றி (அக்தர் – உம்ரான்) இரு நாட்டினரும் ஒப்பிடுவது அர்த்தமற்றது
முதலில் உலக அளவில் அவர் எதையேனும் சாதித்தால் நீங்கள் ஒப்பிடலாம். 150 கி.மீ வேகத்தில் வீசும் எந்த பலரும் நம்பிக்கைக்குரியவர். அந்த வகையில் 150+ வேகத்திற்கு மேல் வீசுபவர்களை போல் உம்ரானும் சுவாரசியமானவர். ஆனால் முதலில் அவர் ஏதாவது போட்டியிட்டு சாதிக்கட்டும். அதன்பின் உலக சாதனை படைத்த வீரர்களுடன் ஒப்பிடலாம். இந்த தருணத்தில் இந்த ஒப்பீடுகள் தேவையற்றதாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.