லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் சிறப்பு போட்டி நெ கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்தியா மஹாராஜஸ் அணியும், ஜாக்ஸ் காலிஸ் தலைமையிலான உலக ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கெவின் ஓ பிரையன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அவருக்கு துணையாக விளையாடி வந்த ஹேமில்டன் மஸகட்ஸா 18 ரன்களிலும், கேப்டன் ஜாக்ஸ் காலிஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடி வந்த கெவின் ஓ பிரையன் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் 52 ரன்களில் கெவின் ஓ பிரையனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய திசாரா பெராரே 23 ரன்களிலும், டைபு 7 ரன்களோடும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த தினேஷ் ராம்டின் 42 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பங்கஜ் சிங் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய மஹாராஜஸ் அணியில் பார்த்தீவ் படேல், விரேந்திர சேவாக், முகமது கைஃப் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரீவஸ்தவா - யூசுப் பதான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீவஸ்தவா அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யூசுப் பதான் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய இர்ஃபான் பதானும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதன்மூலம் இந்திய மஹாராஜஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிசெய்து அசத்தியது.