எல்எல்சி 2023: சிக்சர் மழை பொழிந்த இர்ஃபான் பதான்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது பில்வாரா கிங்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஹாசிம் அம்லா - கௌதம் கம்பீர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹாசிம் அம்லா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கௌதம் கம்பீர் - கிர்க் எட்வர்ட்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களையும் கடந்தனர்.
பின் 63 ரன்களில் கௌதம் கம்பீர் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 59 ரன்களை எடுத்திருந்த கிர்க் எட்வர்ட்ஸும் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பென் டங் 37 ரன்களையும், ஆஷ்லி நர்ஸ் 34 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. பில்வாரா கிங்ஸ் தரப்பில் அனுரீத் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பில்வாரா கிங்ஸ் அணிக்கு லெண்டல் சிம்மன்ஸ் - சோலமன் மிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிம்மன்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய திலகரத்னே தில்ஷன் ஒரு ரன்னுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து சோலமனுடன் இணைந்த ராபின் பிஸ்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் சோலமன் மிர் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் ராபின் பிஸ்ட் 30 ரன்களிலும், 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்கள் எடுத்த நிலையில் சோலமனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய யுசுஃப் பதான் 16 ரன்களுக்கும், கிறிஸ்டோபர் பார்ன்வெல் 22 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதில் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் இர்ஃபான் பதான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர் மழை பொழிந்தார்.
தொடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இர்ஃபான் பதான 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒரு பவுண்டரி 9 சிக்சர்கள் என 19 பந்துகளில் 65 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதமூலம் பில்வாரா கிங்ஸ் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய இர்ஃபான் பதான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.