6,6,6,4,6,6 - ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசித் தள்ளிய மார்ட்டின் கப்தில் - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Oct 03 2024 10:42 IST
Image Source: Google

ஓய்வுபெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படு களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரிச்சர்ட் லீவி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 21 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களைக் குவித்து அசத்தினார். மேற்கொண்டு யூசுப் பதான் 33 ரன்களைச் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைக் குவித்தது. 

சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 3 விக்கெட்டுகளையும், சதுரங்கா டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் ஸ்ரீவஸ்த்ஸ் கோஸ்வாமி 18 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்த சமயத்திலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ட்டின் கப்தில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 9 பவுண்டரி, 11 சிக்ஸர்களை விளாசி 131 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து மிரட்டிய மார்ட்டின் கப்தில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி 34 ரன்களைக் குவித்தும் அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 6ஆவது ஓவரை நவின் ஸ்டீவர்ட் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட மார்ட்டின் கப்தில், முதல் மூன்று பந்துகளில் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதன்பின் அந்த ஓவரின் நான்காவது பந்தை பவுண்டரி விளாசினார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் இரண்டு அபாரமான சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படித்தினார். இதன்மூலம் அந்த ஓவரில் 5 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசிய மார்ட்டின் கப்தில் 34 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் மார்ட்டின் கப்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசித்தள்ளிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை