CT2025: தொடரில் இருந்து விலகிய ஃபெர்குசன்; மாற்று வீரரை அறிவித்தது நியூசிலாந்து!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் காயம் காரண்மாக பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐஎல்டி20 தொடரின் போது காயமடைந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடரின் போது ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் காயத்தை எதிர்கொண்டார். இதனால் இவர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதில் ரச்சின் ரவீந்திரா தனது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மறுபக்கம் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது. மேற்கொண்டு அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி நாளை (பிப்ரவரி 19) தேதி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் லோக்கி ஃபெர்குசன் நியூசிலாந்து அணிக்காக 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனால் அவரின் இழப்பு நியூசிலாந்துக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள கைல் ஜேமிசன் நியூசிலாந்து அணிக்காக இதுநாள் வரை 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் அதில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் அவர் 19 டெஸ்ட் போட்டிகளில் 80 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்