ஆஷஸ் 2023: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Jul 02 2023 20:49 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் மீண்டும் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் 98 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதன் பின் 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்களை எடுத்தார். 

இறுதியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிரௌலி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட்டுடன் இணைந்து நங்கூரமாக நின்று சரிவை சரி செய்ய போராடினார். அந்த வகையில் 5ஆவது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 83 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். 

அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெள்ப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் தனது 13ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன்களை எடுத்திருந்த போது, அலெக்ஸ் கேரியின் சாதுரியத்தால் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கும் திரும்பினார். 

இந்த முடிவால் அதிருப்தி அடைந்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டொக்ஸ் 150 ரன்களைக் கட்டக்க இங்கிலாந்து அணியின் வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரித்திருந்தது. ஆனால் 9 பவுண்டரி, 9 சிக்சர்கள் என பென் ஸ்டோக்ஸ் 155 ரன்களை கடந்த நிலையில் ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த ஸ்டூவர்ட் பிராடும், ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த ஒல்லி ராபின்சன்னும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் இங்கிலாந்து அணி 327 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை