ராபின்சன் ஓவரில் 43 ரன்களை விளாசி வரலாறு படைத்த கிம்பெர் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jun 26 2024 20:22 IST
Image Source: Google

இங்கிலாந்தின் உள்ளூரு கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரிய மிக்க தொடராக கருதப்படுவது கவுண்டி சாம்பியன்ஷிப். இதில் நடப்பு சீசனில் இன்று நடைபெற்ற இரண்டாவது டிவிஷன் கவுண்டி சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் மற்றும் சசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சசெக்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணியானது கேப்டன் சிம்ப்சன் மற்றும் ஆலிவர் கார்டர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 442 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சிம்ப்சன் 183 ரன்களையும், ஆலிவர் கார்டர் 96 ரன்களையும் சேர்த்தனர். லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் ஹாலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணியில் பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் 92 ரன்களையும், வியான் முல்டர் 53 ரன்களையும் சேர்த்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சசெக்ஸ் அணி தரப்பில் சீயன் ஹண்ட் 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் சசெக்ஸ் அணியானது 167 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய சசெக்ஸ் அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 296 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. இதன்மூலம் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸின் 463 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணியில் லூயிஸ் கிம்பெர் அதிரடியாக விளையாடி இறுதிவரை அணியின் வெற்றிக்காக போராடினார். 

இப்போட்டியில் 20 பவுண்டரி, 21 சிக்ஸர்கள் என 243 ரன்களைக் குவித்த நிலையில் கிம்பெர் விக்கெட்டை இழக்க, லீசெஸ்டர்ஷைர் அணியானது இரண்டாவது இன்னிங்ஸின் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சசெக்ஸ் அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் லீசெஸ்டர்ஷைர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் லீசெஸ்டர்ஷைர் அணி வீரர் லூயிஸ் கிம்பெர் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

 

அதன்படி சசெக்ஸ் அணி தரப்பில் ஒல்லி ராபின்சன் விசிய ஒரே ஓவரில் லூயிஸ் கிம்பெர் 43 ரன்களை விளாசினார். அதன்படி, அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 43 ரன்களைக் குவித்தார். அந்த ஓவரில் மொத்தமாக 9 பந்துகளை வீசிய ஒல்லி ராபின்சன், அதில் 3 நேபால்களையும் வீசினார். இதன்மூலம் 134 வருட கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை ஒல்லி ராபின்சன் படைத்துள்ளார். அதேசமயம், கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை லூயிஸ் கிம்பெர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை