எல்பிஎல் 2022: கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!

Updated: Tue, Dec 13 2022 10:53 IST
Image Source: Google

இலங்கையில் உள்ளூர் டி20 தொடரான் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் குர்பாஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா - ரந்திகா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பின் 32 ரன்களில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும், 27 ரன்களில் ரந்திகாவும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சமரவிக்ரமா 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய சோயிப் மாலிக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அசத்தினார். கேப்டன் திசாரா பெரேரா தனது பங்கிறகு 29 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. கொழும்பு ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஹௌல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் டிக்வெல்லா ரன்கள் ஏதுமின்றியும், மதுஷ்கா ஒரு ரன்னிலும், பரனவிதானா 8 ரன்களிலும், சரித் அசலங்கா 3 ரன்களிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூஸ் மட்டும் 38 பந்துகளில் 73 ரன்களைச் சேர்த்தார்.

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை