எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!
இலங்கையில் நடைபெற்றுவரும் நான்காவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி - ஜாஃப்னா கிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - சரித் அசலங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சரித் அசலங்கா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து வந்த தாஹித் ஹிரிடோயும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - பிரியாமல் பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓராளவு தாக்குப்பிடித்தனர். பின் 21 ரன்களுக்கு மில்லரும், 22 ரன்களில் பிரியாமல் பெரேராவும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேராவும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய துனித் வெல்லலகே ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெல்லலகே 38 ரன்களை சேர்த்தார். கண்டி தரப்பில் வநிந்து ஹசரங்கா, நுவான் பிரதீப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.