எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!

Updated: Sun, Jul 30 2023 23:14 IST
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்! (Image Source: Google)

இலங்கையில் தொடங்கி நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு நிஷன் மதுஷங்கா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மதுஷங்கா 12 ரன்களிலும், குர்பாஸ் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்காவும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த தவித் ஹிர்டோய் - பிரியமால் பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பின் பெரேரா 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில அதிரடியாக விளையாடிய ஹிரிடோய் அரைசதம் கடந்த கையோடு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் துனித் வெல்லலகே - கேப்டன் திசாரா பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெல்லலகே 25 ரன்களையும், திசாரா பெரேரா 14 ரன்களையும் சேர்த்தனர். 

இதியடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் 7 ரன்களிலும், பதும் நிஷங்கா ஒரு ரன்னிலும், ஃபெர்னாண்டோ 17 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஆனால் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிரோஷன் டிக்வெல்லா அரைசதம் கடந்த கையோடு 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய யொஷோதா லங்கா 11 ரன்களுக்கும், சமீகா கருணர்த்னே 23 ரன்களுக்கும், முகமது நவாஸ் 3 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இறுதியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாஃப்னா அணி தரப்பில் விஜோன் 3 விக்கெட்டுகளையும், விஜயகாந்த், தில்சன் மதுஷங்கா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை