இந்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - குர்னால் பாண்டியா!

Updated: Tue, May 02 2023 13:19 IST
LSG did not execute plans in batting: Krunal Pandya (Image Source: Google)

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் முதலில் தாங்கள் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் 62 ரன்கள் கொடுத்து நல்ல துவக்கத்தை அளித்திருந்திருந்தனர். அதன் பின்னர் லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாத பெங்களூரு அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.  இதனால் ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் லக்னோ அணியும் துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் வீரர்கள் எவ்வளவோ போராடியும் இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதன் காரணமாக பெங்களூரு அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டன் கே.எல் ராகுல் காயம் அடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட குருனால் பாண்டியா போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “நாங்கள் இந்த போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக 126 ரன்களில் ஒரு அணியை நிறுத்துவது மிகவும் சிறப்பான ஒன்று. அந்த வகையில் உண்மையிலேயே எங்களது பந்துவீச்சு குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

ஆனால் வெற்றிக்கு தேவையான இந்த எளிய இலக்கினை எங்களால் வெற்றிகரமாக துரத்த முடியவில்லை. பேட்டிங்கில் நினைத்தபடி எங்களுடைய திட்டங்கள் எதையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை. இந்த தோல்வி உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை