ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி விளையாடிய முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வென்றாலும், இரண்டாவது போட்டியில் உதைவாங்கியது. இதனல் இரு அணிகளும் தோல்வியிலிருந்து மீண்டுவர போராடும் என்பதாலும், இரு அணியிலும் பல நட்சத்திர வீரர்கள் இருப்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
லக்னோ அணி நடப்பு சீசன் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. முதல் போட்டியில் கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆயுஷ் பதோனி போன்ற வீரர்கள் சோபிக்க தவறியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சிலும் பெரும்பாலான வீரர்கள் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இதனால் இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர்.
பஞ்சாப் கிங்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும், இரண்டாவது போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவான், சாம் கரண் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், பிரப்ஷிம்ரன் சிங் போன்ற வீரர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அணியின் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிராரின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. அவர்களுடன் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் போன்றோர் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.