ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வருகிற 20 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக லக்னோ அணி நிர்வாகம் புதிய ஜெர்சியில் வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் புதிய ஜெர்சியில் உள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக ஆர்பிஎஸ்ஜி குழுமத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா உள்ளார். அதன் காரணத்தினால், இந்த சிறப்பு ஜெர்சியை அணிந்து லக்னோ அணி விளையாடவுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மோஹன் பகான் அணி ஐஎஸ்எல் கால்பந்து லீகில் விளையாடி வருகிறது.
இதில், அந்த அணி நடப்பு சாம்பியனாக திகழ்கிறது. தற்போது ஏடிகே மோஹன் பகான் என அறியப்படும் கால்பந்தாட்ட அணி வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் மோஹன் பகான் சூப்பர் ஜெயண்ட் என மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது