ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக திக்வேஷ் ரதி, அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்!

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷாப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா இருவரும் களத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவர்கள் மீது ஐபிஎல் நடவடிக்கையும் பாய்ந்துள்ளது.
அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை திக்வேஷ் ரதி வீசிய நிலையில் ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆஃப் சைடில் தூக்கி அடித்த நிலையில், பந்து அவர் எதிர்பார்த்தை விட வைடராக இருந்த காரணத்தால் அது காற்றில் இருந்தது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷர்தூல் தாக்கூர் கேட்ச் பிடிக்க, அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
அப்போது திக்வேஷ் ரதி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக தனது வழக்கமான கையொப்பமிடும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த அபிஷேக் சர்மா கடுமையான வார்த்தைகளைக் கூற, இருவருக்கும் இடையே வார்த்தை மோதலானது ஏற்பட்டது. அதன்பின் கள நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரும் சேர்ந்த அவர்களை சமாதனப்படுத்தினர். இருப்பினும் இவர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக திக்வேஷ் ரதி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், அபிஷேக் சர்மாவின் போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் திக்வேஷ் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தில் பெரும் கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். "இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் திக்வேஷ் ரதி செய்த மூன்றாவது குற்றம் இதுவாகும். எனவே, அவர் ஏற்கனவே பெற்ற மூன்று டெமெரிட் புள்ளிகளுடன் கூடுதலாக இரண்டு டெமெரிட் புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் இந்த சீசனில் அவருக்கு மொத்தம் ஐந்து டெமெரிட் புள்ளிகள் உள்ளன. இதன் காரணமாக அவர் ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட செய்யப்பட்டுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடும் அடுத்த போட்டியில் திக்வேஷ் ரதி விளையாட மாட்டார். அதேசமயம் அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் செய்யும் முதல் குற்றம் இதுவாகும். இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்ச அபராதமான 25 சதவீதம் மற்றும் ஒரு டிமெரிட் புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.