ஐபிஎல் 2022: லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக விஜய் தைய்யா நியமனம்!
ஐபிஎல் தொடரில் வரும் 2022ஆம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் லக்னோ, அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இரு அணிகள் வருகின்றன.
இந்நிலையில் லக்னோ அணிக்கு துணைப் பயிற்சியாளராக அனுபவம் மிகுந்த விஜய் தைய்யா நியமிக்கப்பட்டுள்ளார். 48 வயதான தைய்யா இந்திய அணிக்காக 2டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர், விக்கெட்கீப்பிங் செய்தவர்.
உத்தரப்பிரதேச மாநில அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக விஜய் தைய்யா இருந்து வருகிறார். இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துணைப் பயிற்சியாளராக இருந்தபோதுதான் அந்த அணி 2 சாம்பியன் பட்டங்களைவென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் விஜய் தைய்யா இருந்தார், டெல்லி ரஞ்சி அணிக்கு தலைமைப்பயிற்சியாளராகவும் தைய்யா செயல்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதமும், ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதமும் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் தாங்கள்தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்களை 8 அணிகளும் தக்கவைத்துள்ளன.
இதில் அகமதாபாத், லக்னோ அணிகள் ஏலத்துக்கு வரும் முன் 3 வீரர்களைத் தக்கவைக்க முடியும். அந்தவகையில் லக்னோ அணி கே.எல்.ராகுலுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அவர் சம்மதித்தால் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன