WI vs BAN, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!

Updated: Thu, Jul 14 2022 11:29 IST
Image Source: Google

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

கயானாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். மெஹிடி ஹசன் மற்றும் நசும் அகமதுவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அவர்கள் இருவரிடமும் விக்கெட்டுகளை இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீமோ பால் 25 ரன்கள் அடித்தார். ஷேய் ஹோப் 18 ரன்களும், கைல் மேயர்ஸ் 17 ரன்களும் அடித்தனர். பூரன், ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல், பிரண்டன் கிங் ஆகிய அனைவருமே சொதப்ப 35 ஓவரில் வெறும் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக மெஹிடி ஹசன் 4 விக்கெட்டுகளும், நசும் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதையடுத்து எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - நஜிமுல் ஹொசைன் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஹொசைன் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய லிட்டன் தாசும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தமிம் இக்பால் அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் வங்கதேச அணி 20.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை