உலகக்கோப்பை 2023: இறுதிகட்ட இலங்கை அணி அறிவிப்பு; ஹசரங்கா இல்லை!

Updated: Tue, Sep 26 2023 18:10 IST
உலகக்கோப்பை 2023: இறுதிகட்ட இலங்கை அணி அறிவிப்பு; ஹசரங்கா இல்லை! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் நாளை விளையாடி, நாளை மறுநாள் 28ஆம் தேதி உலகக்கோப்பை இறுதி அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் இன்று இலங்கை அணி தன்னுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை சற்றுமுன் வெளியிட்டு இருக்கிறது. கடந்த வாரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் பெரிய பூகம்பங்களை உருவாக்கியது.

பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் படுதோல்விகளை சந்தித்து வெளியேறியது அந்த அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து இருக்கிறது. இதேபோல் இலங்கை அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 50 ரன்கள் சுருண்டு படுதோல்வி அடைந்தது, அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய விமர்சனத்தை உருவாக்கியது. இதன் காரணமாக கேப்டன் தசுன் ஷனகாவை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று, பலத்த குரல்கள் எழுந்தது. 

மேலும் அணிக்கு அனுபவ வீரர்களை கொண்டு வர வேண்டும் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் என அனுபவ மூத்த வீரர்களுக்கும் அணியில் இடம் தரப்படவில்லை. மேலும் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷன்கா தொடர்கிறார். துணை கேப்டனாக குசால் மெண்டிஸ் தேர்ர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் ஆசியக் கோப்பையில் பங்கேற்காத நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா காயம் சரியாகாததால் அணிக்கு திரும்பவில்லை. மேலும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீராவும் திரும்பவில்லை. இருப்பினும் மஹீஷ் தீக்‌ஷனா, லகிரு குமாரா ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் ரிசர்வ் வீரராக சமீகா கருணரத்னேவின் பெயர் மட்டுமே இடம்பிடித்துள்ளது.

இலங்கை அணி : தசுன் ஷனகா (கே) குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிசங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷன் ஹேமந்த, மஹீஷ தீக்ஷனா, துனித் வெல்லலகே, கசுன் ராஜிதா, மதீஷா பத்திரனா, லகிரு குமார, தில்ஷன் மதுஷங்க. 

ரிசர்வ் வீரர்: சமிகா கருணாரத்ன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை