வீரர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியது பிரச்சனைக்கு காரணம் - தகவல்!
இந்தியாவில் வீசும் கரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப, வெளிநாட்டு வீரர்கள் பலர் மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர்கள். அவர்கள் நாளை (மே.16) ஆஸ்திரேலியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹஸ்ஸிக்கு, நேற்று நான்காவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் 'நெகட்டிவ்' என்று வந்ததால் அவர் சென்னையை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு, வீரர்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், “ஐபிஎல் 2021 சீரிஸ் தொடங்குவதற்கு முன், கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும் என்று அவர்கள் தயக்கம் காட்டினார்கள். அதே சமயம், சில வெளிநாட்டு வீரர்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால், இந்திய வீரர்கள் தடுப்பூசிக்கு பயந்தனர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தியும் சில இந்திய வீரர்கள் கேட்கவில்லை. இதில், அவர்களை குறை சொல்லி பலனில்லை.போதுமான விழிப்புணர்வு இல்லாததே பயத்துக்கு காரணம். எனினும், சில அணி நிர்வாகங்கள், தங்கள் வீரர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியது. சில நிர்வாகங்கள் அதை செய்யவில்லை. வீரர்களும், பயோ-பபுளில் இருப்பது பாதுகாப்பானது என்பதால், தடுப்பூசி வேண்டாம் என்று நினைத்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.