தோனியின் ரன் அவுட்டக்கிற்காக இன்றளவும் அவரது ரசிகர்கள் திட்டிவருகின்றனர் - மார்ட்டின் கப்தில்!
இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அந்த உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று பார்க்கப்பட்ட வேளையில் நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இருந்தது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்களை குவித்து இருந்தது. பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்த வேளையில் இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் ரிஷப் பந்த் ஓரளவு சுதாரித்து 32 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க 22 ஓவர்களில் இந்திய அணி 71 ரன்களை மட்டுமே குவித்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்நேரத்தில் பாண்டியாவும் 32 ரன்களில் வெளியேற இந்திய அணி 92 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவும், தோனியும் விளையாடிய விதம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஜடேஜா 77 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற இறுதி நேரத்தில் தோனி வெற்றிக்காக போராடினார். அப்போது கடைசி கட்டத்தில் 48.3ஆவது ஓவரின் போது பைன் லெக் திசையில் பந்தினை தட்டிவிட்ட தோனி இரண்டு ரன்கள் ஓட ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார்.
அதிலும் குறிப்பாக மார்ட்டின் கப்தில் அடித்த த்ரோ நேராக ஸ்டம்பை தாக்கியதால் நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனதோடு சேர்ந்து அரையிறுதியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. அப்படி ரன் அவுட்டாகிய தோனி வெளியேறிய போது கண் கலங்கியபடியே மைதானத்தில் இருந்து வெளியேறிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த சம்பவம் குறித்து நினைவினை பகிர்ந்த நியூசிலாந்து அணியின் வீரர் மார்ட்டின் குப்தில், “அன்றைய போட்டி எனக்கு இன்றளவும் ஞாபகம் இருக்கிறது. தோனி இரண்டாவது ரன்னுக்கு ஓடி வரும்போது நான் பந்தை ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்தேன். எதிர்பாரா விதமாக அந்த த்ரோ மிகச்சரியாக ஸ்டம்பை தாக்கி தோனியை ஆட்டமிழக்க வைத்தது. அப்படி நான் தோனியை ரன் அவுட் செய்ததிலிருந்து இந்திய ரசிகர்களுக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது. இன்றளவும் தோனியின் ரசிகர்கள் அவரை ஏன் ரன் அவுட் செய்தீர்கள்? என்று என்னை திட்டி தீர்த்தவாறு மெயில் அனுப்பி வருவதாக வெளிப்படையாக” பகிர்ந்துள்ளார்.