ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியின் தொடங்குவதற்கு முன் மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மீண்டும் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களமிறங்கினர். 

Advertisement

இதில் ஜோஷ் இங்கிலிஸ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 28, கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 55 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - மிட்செல் ஸ்டார்க் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேமரூன் க்ரீன் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸும் ஒரு ரன்னிற்கும, மேத்யூ ஷார்ட 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த மிட்செல் ஸ்டார்க் 24 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக், பாஸ் டீ லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. அட்டத்தின் முதல் ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நட்சத்திர விரர்களான மேக்ஸ் ஓடவுட், வெஸ்லி பரேஸி ஆகியோரது விக்கெட்டையும், அடுத்த ஓவரின் முதல் பந்தில் பாஸ் டி லீடின் விக்கெட்டையும் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டுகளைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

அதன்போல் விக்ரம்ஜித் சிங் 9 ரன்களிலும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 9 ரன்களிலும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் அக்கர்மேன் 31 ரன்களையும், லோகன் வான் பீக் 9 ரன்களையும் எடுக்க நெதர்லாந்து அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தடைபட்டது. அதன்பின் மழை பொழிவு அதிகளவு இருந்ததால் இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இன்று கௌகாத்தில் மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News