ஐபிஎல் தொடர் நிச்சயம் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!

Updated: Sat, Jul 01 2023 15:44 IST
Matthew Hayden on IPL helping overseas players in World Cup 2023! (Image Source: Google)

இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் தொடரில் சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கியமான இடத்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதை வைத்து எல்லா அணிகளும் தங்களது தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

எனவே சொந்த நாட்டில் விளையாடுவதாலும் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்பதாலும், சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருக்கின்ற காரணத்தினாலும் இந்திய அணிக்கு கூடுதல் நன்மை இருப்பதாக கணிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பது இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிகப்படியாக கலந்து கொண்டு விளையாடும் வீரர்களின் தயாரிப்புகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், “ஐபிஎல் நிச்சயமாக வெளிநாட்டு வீரர்களின் உலக கோப்பைக்கான தயாரிப்புகளில் உதவி செய்யும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். ஆனால் இதுவே முழுமையான காரணியாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தந்த நாளின் நிலைமைகள் வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்றபடி விளையாடுவது என்பது மிகவும் முக்கியமானது. இந்த உலகக் கோப்பையில் முக்கியமான காரணியாக சுழற் பந்துவீச்சு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

நீங்கள் இந்தியாவிற்கு வரும்பொழுதெல்லாம் உங்கள் அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும். அதேபோல் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக திறமையாக விளையாடும் பேட்ஸ்மேன்களும் இருக்க வேண்டும் இது இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு கூடுதல் சாதகத்தை வழங்குகிறது. அவர்கள் இந்த நிலைமைகளில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களையும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடும் நல்ல பேட்ஸ்மேன்களையும் வைத்திருக்கிறார்கள். 

ஆஸ்திரேலியாவிலும் இளம் ஆடம் ஜாம்பா இருக்கிறார். அவர் இந்த நிலைமைகளில் நன்றாக விளையாடியுள்ளார். இது முக்கியமானது.இதேபோல் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் வார்னே விளையாடவில்லை. அந்த உலகக் கோப்பையில் இளம் பிராட் ஹாக் வெளியில் வந்தார். இதுபோல வெளியில் பெரிய அளவில் அறியப்படாத வீரர்களும் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படலாம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை