இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்!

Updated: Tue, Aug 22 2023 12:22 IST
இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்! (Image Source: Google)

ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிப்பில் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து வந்த சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் விளையாடாத இருபது வயதான திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது பலரும் விரும்பிய முடிவாக இருக்கிறது.

அதே சமயத்தில் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சஞ்சு சம்சனை பேக்கப் வீரராக வெளியே வைத்திருக்கிறார்கள். ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வில் மிக முக்கிய விவாதங்களாக இருப்பது இந்த மூன்று விஷயங்களும்தான். மற்றபடி காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் இருவரும் திரும்பி வந்திருப்பது இந்திய அணிக்கு நல்ல செய்தி.

ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், "இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது. கில் தனது நாட்டுக்காக இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வில்லை. திலக் வர்மா தன் நாட்டுக்காக இன்னும் விளையாட ஆரம்பிக்கவில்லை. இதனால் இவர்களால் அணிக்கு தேவையானதை வழங்க முடியாது என்பது கிடையாது. இப்படி முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் என்ன செய்தார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஐபிஎல் சர்வதேச கிரிக்கெட் வேறு வேறுதான். ஆனாலும் இவர்கள் திறமையானவர்கள்.

உலக கோப்பைக்கு முன் நீங்கள் எப்பொழுதும் சில வீரர்களை நிரந்தரமாக கொண்டிருக்கப் போகிறீர்கள். நான் திலக் வர்மாவின் கிளாஸ் என்ன என்பதை பார்த்தோம். இது இந்த உலகக்கோப்பையில் மட்டும் இல்லாமல் அடுத்து 2024இல் நடக்கும் உலகக்கோப்பைக்கும் நல்ல யுக்தி. இந்தியாவை பொறுத்த வரை நல்ல விஷயம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவை போலவே டாப் ஆர்டர் மிக பலமாக இருக்கிறது. 

இவர்களை கடைசி நான்கு மாதங்களில் பார்க்கும் பொழுது மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டரில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். திலக் வர்மா மாதிரியான திறமையான வீரர்களை வைத்து அந்த இடத்தை நிரப்பினால், அது சூர்யகுமாருக்கு அழுத்தத்தை கொடுக்கும். இது நல்ல பிளான் ஆக இருக்கும். சூரிய குமாரையும் உள்ளே வைத்து நேர்மையாக செயல்படுங்கள்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை