ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய மேத்யூ ஷார்ட்!

Updated: Sat, Sep 14 2024 10:50 IST
Image Source: Google

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 50 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 31 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பில் சால்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அவர் 39 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேலும் 44 ரன்களில் விக்கட்டை இழந்தார். ஆனாலும் இப்போட்டியில் 4ஆம் வரிசையில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். 

பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடிய லிவிங்ஸ்டோன் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், இங்கிலாந்து அணியானது 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய மேத்யூ ஷார்ட் வரலாற்று சாதனை ஒன்றப்படைத்துள்ளார். அதன்படி, இந்த போட்டியில் ஏழாவது பந்துவீச்சாளராக பந்துவீச வந்த மேத்யூ ஷார்ட் 3 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட்டின் 147 ஆண்டுகால வரலாற்றில் ஏழாவது பந்துவீச்சாளராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை மேத்யூ ஷார்ட் படைத்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்த போட்டியில் ஷார்ட்க்கு முன் ஆறு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதில் ஆரோன் ஹார்டி, சீன் அபோட், மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஆடம் ஜம்பா மற்றும் கூப்பர் கோனாலி ஆகியோர் பந்துவீசினார்கள். அவுஸ்திரேலியா தரப்பில் ஷார்ட் தவிர, சீன் அபோட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை