ஐபிஎல் 2022: ஆத்திரத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமை உடைத்து தள்ளிய மேத்யூ வேட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடந்துவரும் வாழ்வா சாவா என்ற போட்டியில் உள்ள பெங்களூரு அணி டாஸை தோற்று பந்துவீச பணிக்கப்பட்டது. குஜராத் அணி வீரர்கள் பெரிய இலக்கை நிர்ணயித்து கடும் நெருக்கடி தரும் முனைப்பில் தங்களது இன்னிங்சை தொடங்கினர்.
சுப்மான் கில் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சாஹா , மேத்தீவ் வேட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த பார்த்தனர். மேத்தீவ் வேட் 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலககோப்பை வாங்கி தந்தவர்களில் மிக முக்கியமான நபர் பார்ம்க்கு திரும்பிவிட்டதாக குஜராத் ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் 5.2வது ஓவரில் தான் மேத்தீவ் வேட்க்கு நடுவர் வேட்டு வைத்து விட்டார். மெக்ஸ்வேல் வீசிய பந்தை ஸ்விப் செய்ய மேத்தீவ் வேட் முயன்றார். அப்போது பந்து காலில் பட்டது. இதற்கு கள நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேத்தீவ் வெட் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார்.
அப்போது மறு ஆய்வில் பந்து ஸ்டம்பை தாக்கியது தெரியவந்தது. ஆனால் அதற்கு முன்பு பேட்டை ஸ்விப் செய்த போது, அதில் பந்து பட்டு நகர்ந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால் பேட்டில் பட்டதை காண்பிக்கும் ஸ்நிக்கோ மீட்டரில் ஏதும் தெரியவில்லை. இதனால் குழம்பி போன மூன்றாம் நடுவர் அவுட் என்றே அறிவித்தார்.
இதனால் மேத்தீவ் வேட் அதிர்ச்சி அடைந்தார். பேட்டில் பந்து பட்டது தெளிவாக தெரிந்தும், ஸ்நிக்கோ மீட்டரில் காட்டவில்லை என்பதால் நடுவர் அவுட் கொடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மேத்யூ வேட் டிரெஸ்ஸிங் ரூமில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார்.
நடுவர் முடிவில் தவறு இருக்க கூடாது என்பதற்காக தான் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பமே காலை வாரினால் என்ன செய்வது?
சரியாக இயங்காத தொழில்நுட்பத்தை கொடுக்கும் ஸ்டார் நிறுவனம் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று தான் மும்பைக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா பேட்டில் படுவதற்கு முன்பே ஸ்நிக்கோ பட்டதாக காண்பித்து அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்த இது போன்ற தவறான முடிவு தரப்படுவது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.