பிபிஎல் 2024: காயம் காரணமாக மேக்ஸ்வெல் பங்கேற்பதில் சந்தேகம்?
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்று அசத்தியது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் செயல்பட்டு வரும் நிலையில், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்தார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்தததை தொடர்ந்து அவர் களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதுடன், அதன்பிறகு பேட்டிங் செய்யவும் களமிறங்கவில்லை. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் இரண்டாம் நிலை காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்பதால், எதிவரும் பிக் பேஷ் லீக் தொடரின் முதல் சில ஆட்டங்களில் அவரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் அவர் காயம் மேலும் தீவிரமடையும் பட்சத்தில் அவரால் இத்தொடர் முழுவதும் விளையாட முடியாத அபாயமும் உள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பிக் பேஷ் லீக் தொடங்கும் முன்னரே மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேக்ஸ்வெல் இல்லாத பட்சத்தில் அந்த அணியை மார்கஸ் ஸ்டொய்னிஸ் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிவரும் பிக் பேஷ் லீக் தொடரின் முதல் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்த்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.