தனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் - உண்மையை உடைத்த கிளென் மேக்ஸ்வெல்!

Updated: Tue, Apr 16 2024 13:42 IST
தனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் - உண்மையை உடைத்த கிளென் மேக்ஸ்வெல்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவகையில் ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடராக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளின் முடிவில் 6 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சரிவர சோபிக்காததே அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கிளென் மேக்ஸ்வெல் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விளையாடவில்லை என கூறப்பட்டது. 

ஆனால், நேற்றைய போட்டியில் தனது மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸுடம்  தனக்கு ஓய்வு கொடுத்து, தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில போட்டிகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு முடிவை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. கடைசியாக நடந்த போட்டியில் விளையாடியவுடன்,கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் பயிற்சியாளரிடம் சென்று எனக்கு பதிலாக வேறு யாரையாவது அணியில் முயற்சித்து பார்க்கலாம் என்றேன்.

நான் இதே மாதிரியான சூழல்களில் முன்பும் இருந்திருக்கிறேன். சரியானவை நிகழாத சமயத்தில் மேற்கொண்டு விளையாடினால் அது சரியாக இருக்காது. இதன் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்தேன். ஏனெனில் நீங்கள் ஃபார்மில் இல்லாத போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வலுவடைய கொஞ்சம் கால அவகாசம் தேவை. ஒருவேளை இந்த சீசனின் பிற்பகுதியில் அணிக்கு என்னுடைய தேவை ஏற்பட்டால் அப்போது மீண்டும் எனது வலுவான கம்பேக்கை கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் அணிக்காக விளையாட விரும்பும் அளவுக்கு எப்படி செயல்பட வேண்டும் திட்டமிடவில்லை என நினைக்கிறேன்.

கடந்த சில போட்டிகளின் முடிவுகளும் அதைத்தான் பிரதிபலிக்கின்றன. தனிப்பட்ட முறையில் நான் சிறப்பாக விளையாடவில்லை. அணிக்காக பேட்டின் மூலம் பங்களிப்பு செய்யவில்லை.  பவர்பிளே முடிந்த பிறகு மிடில் ஓவர்களை கையில் எடுத்துக் கொண்டு விளையாடுவது தான் எனது வேலை. அதை நான் சரியாக செய்யவில்லை. இந்த போட்டி நடந்த பிட்ச் கடந்த சில போட்டிகள் நடந்த பிட்ச்சை போல கடினமாக இருக்கவில்லை. ஒரு பேட்டராக இப்படியான பிட்ச்சையும் போட்டியையும் தவறவிடுவது துரதிஷ்டவசமானது. ஆனால், நான் முன்பே சொன்னதைப்போல என்னுடைய உடலுக்கும் மனதுக்கும் நான் கொஞ்சம் ஓய்வு தேவை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை