மயங்க் யாதவின் பந்துவீச்சு திறன் ஈர்க்க வைக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 20 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 19 ரன்களுக்கு, ராஜத் பட்டிதார் 29 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர்.
இதனால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “ இந்த போட்டியில் நாங்கள் இரண்டு கேட்ச்களை தவறவிட்டதற்கான விலையை நாங்கள் கொடுத்துள்ளோம். அதிலும் இரண்டும் தலை சிறந்த வீரர்கள், டி காக் 25-30 ரன்கள் இருக்கும்போது அவுட்டில் இருந்து தப்பித்தார். பூரன் 2 ரன்னில் தப்பினார். இதன் காரணமாக அவர்கள் கூடுதலாக 60-65 ரன்கள் கொடுக்க வேண்டியதாயிற்று.
ஐபிஎல் தொடரில் இதுபோன்ற தவறுகளுக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும். மயங்க் யாதவ் தற்போது அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். நாங்கள் இதற்கு முன்னதாக அவரது பந்து வீச்சை எதிர்கொண்டது இல்லை. இதுபோன்ற வேகப்பந்துகளை நாங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் தேவை. ஆனால் அவருடைய லெந்த் மற்றும் துல்லியமான பந்துவீச்சு திறமை ஈர்க்க வைக்கிறது. நாங்கள் பவர் பிளேயில் சிறப்பாக பந்துவீசவில்லை என்பதால் மேக்ஸ்வெல்லிற்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தேன்.
அவர் மீது வைத்த நம்பிக்கையை காப்பற்றி ரன்களை கட்டுப்படுத்தினார். மேலும் டெத் ஓவர்களில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைப்பது அவசியம். ஆனால் நாங்கள் அதனை சிறப்பாக செயல்படவில்லை. பட்டிதார்-ராவத் ஜோடியின் 36 ரன்கள் லக்னோ அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியவில்லை. மஹிபால் லோம்ரோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழந்ததும் எங்களுடைய சிறிய நம்பிக்கையும் தகர்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.