தோனிக்கு முன் இவர் தான் எனது ரோல் மாடல் - இஷான் கிஷான் ஓபன் டாக்!

Updated: Wed, Dec 21 2022 10:33 IST
Image Source: Google

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரை இழந்த இந்தியா கடைசி கிரிக்கெட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஆறுதல் வெற்றியை சுவைப்பதற்கு 210 (126) ரன்கள் விளாசிய இஷான் கிஷான் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த வீரர் ஆகிய 2 புதிய உலக சாதனைகளையும் அவர் படைத்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரை 2022 ஐபிஎல் தொடரில் 15 கோடி என்ற பெரிய தொகைக்கு மும்பை நிர்வாகம் தக்க வைத்தது. ஆனால் அதிகப்படியான விலையால் எப்படியாவது சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளான அவர் பார்மை இழந்து ரன்கள் குவிக்க முடியாமல் திண்டாடினார்.

இருப்பினும் இந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். குறிப்பாக சமீப காலங்களில் தடவலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்த இந்திய வீரர்களுக்கு மத்தியில் 40 ஓவர்களுக்குள் அவுட்டாகாமல் கடைசி வரை நின்று விளையாடிருந்தால் 300 ரன்களை அடித்திருக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மிகுந்த அதிரடி வீரராக இஷான் கிஷான் திகழ்கிறார்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் 93 ரன்களில் இருந்த அவர் சதத்தை சிக்ஸருடன் தொட முயற்சித்து அவுட்டானார். அப்போது சிங்கிள் எடுத்திருக்கலாமே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சிக்ஸர் அடிப்பது என்னுடைய பலமாக இருக்கும் போது நான் ஏன் சிங்கிள் எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்? என்று அவர் கூறிய பதிலும் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. 

முன்னதாக வரலாறு கண்ட மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக போற்றப்படும் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தான் 90, 190, 290 ஆகிய ரன்களில் இருக்கும் போது பயப்படாமல் சிக்ஸர் அடித்து சதமடிப்பார். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் தோனி தம்முடைய குருவாக இருந்தாலும் அதிரடியாக விளையாடுவதில் பிரட் லீ உள்ளிட்ட உலகின் அத்தனை தரமான பவுலர்களையும் தெறிக்க விட்ட வீரேந்திர சேவாக் தான் தன்னுடைய ரோல் மாடல் என்று இஷான் கிஷான் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய இஷான் கிஷான், “ஒருவேளை வீரேந்திர் சேவாக் விளையாடிய நிறைய போட்டிகளின் ஹைலைட்ஸ்களை பார்த்த காரணத்தால் தான் நானும் அவரை போல் அதிரடியாக பேட்டிங் செய்கிறேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பந்து வீச்சாளர்களை அடித்த விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக பிரெட் லீ, சோயப் அக்தர் என யாராக இருந்தாலும் அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சரவெடியாக பேட்டிங் செய்வார். எனவே அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை நான் அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டுள்ளேன்.

நான் எப்போதும் அட்டாக் செய்யும் பேட்டிங் ஸ்டைலை விரும்புகிறேன். அவரைப் போலவே ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டிங் செய்வதையும் நான் நிறைய பார்த்துள்ளேன். ஆனால் எம்எஸ் தோனி எனக்கு நிச்சயமாக மிகவும் பிடிக்கும். கில்கிறிஸ்ட் அவர்களின் பேட்டிங் ஸ்டைல் மற்றும் விக்கெட் கீப்பிங் நுணுக்கங்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் அமைதியாக இருப்பது போன்ற தோனி பாயின் அனைத்து குணங்களும் எனக்கு அதிகமாக பிடிக்கும். அவர் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். நம்மிடமும் நம்மை சுற்றி இருப்பவரிடமும் எப்பை அன்பு காட்ட வேண்டும் என்பதையும் அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை