சர்ச்சையை கிளப்பிய கேட்ச்; எம்சிசி கூறும் விளக்கம்!

Updated: Mon, Jan 02 2023 17:28 IST
MCC Confirms The Legality Of Michael Neser's Controversial Juggling Catch In BBL Match (Image Source: Google)

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பிர்ஸ்பேன் அணி வீரர் மைக்கேல் நெசெர் லாவகமாக பிடித்த கேட்ச் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தும் இதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் நியாயம் தான்.

209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஜோர்டன் சில்க் எனும் வீரர் ஆட்டத்தின் 18.2 ஓவரில் வைட் லைனில் வீசப்பட்ட பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி விளாசினார். அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த பிர்ஸ்பேன் அணி வீரர் மைக்கேல் நெசெர் லாவகமாக கேட்ச் பிடித்தார். பந்தை பிடித்தவுடன் தூக்கி எறிந்துவிட்டு வெளியே சென்ற அவர், மீண்டும் அதனை பிடித்து அசத்தினார். ஆனால் அவர் எப்படி பிடித்தார் என்பது தான் பிரச்சினையே ஆகும்.

பவுண்டரி எல்லையிலேயே அந்த பந்தை பிடித்த அவர், கால் கோட்டை தொட்டுவிடக்கூடாது என்பதற்காக பந்தை தூக்கி வீசிவிட்டு, பவுண்டரிக்கு வெளியில் சென்றார். தூக்கி விசிய பந்து பவுண்டரிக்கு வெளியே சென்றுவிட்டது. அப்போதும் மைக்கேலும் வெளியே சென்று, அங்கேயே குதித்து தரையில் கால் படாமல் பந்தை மீண்டும் பிடித்து தூக்கி களத்திற்கு வீசினார். பின்னர் மீண்டும் களத்திற்குள் ஓடி வந்து கேட்ச் பிடித்தார். பவுண்டரிக்கு வெளியே ஒரு கேட்ச்-ஐ பிடித்தது அவுட்டா? நாட் அவுட்டா? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் அதற்கு அம்பயர்கள் அவுட் என முடிவு கொடுத்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விதிகளை வகுக்கும் எம்சிசி (MCC) என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். அதாவது பவுலர் பந்துவீசும் போது சிக்சர் லைனை தாண்டி ஒரு ஃபீல்டர் நிற்க கூடாது. அப்படி நின்று பந்தை நீங்கள் தரையில் கால் படாமல் கேட்ச் பிடித்தாலும் அது அவுட் ஆகாது. மாறாக சிக்சர் வழங்கப்படும். ஏனென்றால் அவர் பந்தை பிடிக்கும் முன்பே சிக்சர் லைனில் நின்றுவிட்டார். மாறாக, பவுண்டரி லைனுக்கு உள்ளே நின்று பந்தை பிடித்து பிறகு நீங்கள் தாண்டலாம். ஆனால் சிக்சர் லைனில் பந்து உங்கள் கையில் இருக்கும் போது கால் தரையில் படக்கூடாது.

நேற்றைய போட்டியில் நேற்று பந்தை அவர் முதலில் தொடும் போது பவுண்டரி லைனுக்கு உட்பட்டு தான் முதலில் இருந்தார். சிக்சர் லைனுக்கு சென்றதும் பந்து கையில் இருக்கும் போது கால் தரையில் படவில்லை. இதனால் தான் அவுட் வழங்கப்பட்டது. எனவே எம்சிசி விதிப்படி அம்பயர்கள் அவுட் கொடுத்தது சரிதான் எனக்கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை