பிபிஎல் 2023: ஹார்ப்பர் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜுவெல் மற்றும் மெக்டெர்மோட் ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட்டும் 20 ரன்களோடு பெவிலியன் திரும்ப, பின்னர் வந்த ஸாக் கிரௌலி, டிம் டேவிட், ஆசில் அலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்வரிசையில் ஃபஹீம் அஷ்ரஃப் 17 பந்தில் 26 ரன்களும், ஜோயல் பாரிஸ் 8 பந்தில் 16 ரன்களும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்துள்ளது. ரெனிகேட்ஸ் தரப்பில் டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக விளையாடி19 பந்தில் 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஆரோன் ஃபின்ச் 5 ரன்களிலும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இருப்பினும் 3ஆம் வரிசையில் இறங்கிய சாம் ஹார்ப்பர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்துடனு அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் 48 பந்துகளைச் சந்தித்த ஹார்ப்பர் 7 சிக்சர், 4 பவுண்டரிகள் மொத்தம் 89 ரன்களை குவித்து மெல்பர்ன் ரெனிகேட்ஸை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 19ஆவது ஓவரின் முதல் பந்திலேயே மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.