ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா; பிரஷித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!

Updated: Sat, Nov 04 2023 10:27 IST
Image Source: Google

இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். முதல் நான்கு போட்டிகளில் அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இருந்தார் ஆல் - ரவுண்டர் பாண்டியா. அவருக்கு பேட்டிங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். அவர் தனது முதல் ஓவரை வீச வந்த போது இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியிலிருந்து விலகி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டார். பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெற மாட்டார் என்றும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், கடைசியாக நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இடம் பெறவில்லை. பாண்டியா இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், பவுலிங்கில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். முகமது ஷமி விளையாடிய 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

இதில், 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நெதர்லாந்திற்கு எதிராக நடக்கும் கடைசி போட்டியில் இடம் பெறுவார் என்றும், அரையிறுதிப் போட்டிகளில் இடம் பெறவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவருக்கு காயம் இன்னும் குணமடையாத நிலையில், இந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவருக்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு பிளேயிங் 11இல் இடம் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை