மும்பை, டெல்லி மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை - பிசிசிஐ!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.
இந்நிலையில், இந்தியா தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு கொண்ட நகரமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த பட்டியலில் இப்போது மும்பையும் இணைந்துள்ளது. டெல்லியை விட மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை மைதானங்களில் போட்டிகள் இருப்பதால் வீரர்களின் குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மும்பை மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்து பிசிசிஐ அதிரடி உத்தரவை விதித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “சுற்றுச்சூழலைப்பாதுகாப்பதில் பிசிசிஐ கவனம் கொள்கிறது. மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது எந்த வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்படாது. இது தொடர்பாக ஐசிசியிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். ரசிகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிசிசிஐ எப்போதும் அக்கறை கொண்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.