இலங்கை, தென் ஆப்பிரிக்க போட்டிகளையும் தவறவிடும் ஹர்திக் பாண்டியா!
நாளை இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. தற்பொழுது ஆறு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட, இந்திய அணி அதிகாரப்பூர்வமாக இன்னும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டியில் வெல்வதின் மூலம் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்க் எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் லீக் சுற்றின் கடைசி போட்டியான நெதர்லாந்து அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது இடத்தில் தமிழக வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின் களமிறங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பந்துகளை மிக மோசமாக விளையாடி தன்னுடைய விக்கெட்டை கொடுத்து வருகிறார். இருந்தாலும் இந்திய அணி அடுத்த போட்டியில் அவரை மாற்றாது என்றே தெரிகிறது. காரணம் மத்திம ஓவர்களில் சுழற் பந்துவீச்சை விளையாடி ரன்கள் கொண்டு வருவதில் அவர் திறமையானவர். எனவே நாளை அவருக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
இஷான் கிஷான் ஆசிய கோப்பையில் நல்ல விதத்தில் விளையாடி இருந்தாலும் கூட, அவர் மத்திய ஓவர்களில் சுழற் பந்துவீச்சில் ஸ்ட்ரைக்கை சுழற்றி ஒன்று இரண்டு ரன்கள் எடுப்பதில் தடுமாற்றம் கொண்டிருந்தார். எனவே அவரை நான்காம் இடத்தில் கொண்டு வருவதற்கு இந்திய அணி நிர்வாகம் தயங்கும். இதனால் சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.