முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணிக்கு இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் முக்கியமானதாக கருதபடுகிறது.
இந்த முத்தரப்பு தொடருக்கு முன்னதாக பயிற்சி முகாமுக்கான 20 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான இறுதிக்கட்ட ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்ட்டுள்ளது. அதன்படி இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் கரபோ மெசோ, சேஷ்னி நாயுடு மற்றும் மியான் ஸ்மித் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர்த்து பயிற்சி முகாமிற்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த லாரா குடால், அயன்டா ஹ்லுபி, எலிஸ்-மாரி மார்க்ஸ், துமி செகுகுனே, ஃபே டன்னிக்லிஃப் ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த முத்தரப்பு தொடரில் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மரிஸான் கேபிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், கராபோ மெசோ, நோன்குலுலேகோ ம்லாபா, செஷ்னி நாயுடு, நோண்டுமிசோ ஷங்காஸ், மியானே ஸ்மிட் மற்றும் க்ளோஸ் ட்ரையன்.
Also Read: Funding To Save Test Cricket
மகளிர் ஒருநாள் முத்தரப்பு தொடர் அட்டவணை:
- ஏப்ரல் 27 - இலங்கை vs இந்தியா
- ஏப்ரல் 29 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- மே 1 - இலங்கை vs தென் ஆப்பிரிக்கா
- மே 4 - இலங்கை vs இந்தியா
- மே 6 - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- மே 8 - இலங்கை vs தென்ஆப்பிரிக்கா
- மே 11- இறுதிப்போட்டி