எஸ்ஏ20 2025: கீரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவித்தது மும்பை நிர்வாகம்!
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.
மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதிலும், அணியில் இருந்து நீக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன்படி, எதிர்வரும் எஸ்ஏ20 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது தங்கள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கீரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணமாக ஐக்கிர அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல் டி20 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் எமீரேட்ஸ் அணியிலும் கீரன் பொல்லார்ட் அங்கம் வகித்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்ஏ20 மற்றும் ஐஎல்டி20 தொடர்கள் நடைபெறும் போட்டி அட்டவணையானது ஒன்றாக இருப்பதால், கீரன் பொல்லார்டை ஐஎல்டி20 தொடரில் விளையாடும் வகையில் எஸ்ஏ20 லீக் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி வெளியிட்டிருந்த தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலிலும் கீரன் பொல்லார்ட் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கீரன் பொல்லார்ட் தலைமையில் எஸ்ஏ20 லீக் தொடரில் இரண்டு சீசன்களை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், இரண்டு சீசன்களில் தலா 3 வெற்றி மற்றும் 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்திருந்தது. இதன் காரணமாக கூட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கருத்துகளும் வெளியாகியுள்ளன.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதுமட்டுமின்றி அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த கீரன் பொல்லார்டை மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் தற்போது அணியில் இருந்து விடுவித்துள்ள நிலையில், புதிய கேப்டனை நியமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் எதிர்வரும் சீசனில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.