ஆஷஸ் தொடர்: பட்லரின் ஆட்டத்தை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!

Updated: Tue, Dec 21 2021 10:25 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சொதப்பிவருகிறது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது. 

அடிலெய்டில் நடந்த 2ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 முக்கியமான பவுலர்கள் ஆடவில்லை. அப்படியிருந்தும் கூட, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கும் 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. 

கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆட்டத்தை டிரா செய்ய போராடினார். 200க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டார்.  ஆனால் தேநீர் இடைவேளைக்கு பிறகு 9ஆவது விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, எஞ்சிய ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கு பாசிட்டிவான விஷயம் என்றால், ஜோஸ் பட்லரின் பேட்டிங் தான். பட்லர் 200 பந்துகளுக்கு மேல் ஆடியது இங்கிலாந்து அணிக்கு நல்லது. பொதுவாக அடித்து ஆடக்கூடிய பட்லர், இந்த போட்டியில் முழுக்க முழுக்க தடுப்பாட்டம் ஆடி, இங்கிலாந்தை காப்பாற்ற போராடினார்.

இந்நிலையில், அவரது பேட்டிங்கை பாராட்டி பேசிய மைக் ஹஸ்ஸி, “மிகச்சிறப்பு.. கடந்த மாதம் டி20 உலக கோப்பையில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி மைதானத்திற்கு வெளியே அனுப்பிய பட்லர், இப்போது டெஸ்ட் போட்டியில் அணியை காப்பாற்ற முழுக்க முழுக்க தடுப்பாட்டம் ஆடுகிறார். அவர் பேட்டிங் ஆடும் விதம் அபாரம். மிகச்சிறப்பான முயற்சி” என்று புகழ்ந்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை