சிறிய சிறிய பங்களிப்பு சவாலான ஆடுகளத்தில் நிச்சயம் தேவை - ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Wed, Mar 08 2023 20:50 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், “இந்தத் தொடரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ஆடுகளங்களை நான் பார்த்ததிலே இது ஒன்றுதான் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. தற்போது இங்கு வெயில் 38 டிகிரி வரை சுட்டு எரிக்கிறது. இதனால் போட்டி செல்ல செல்ல ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் காணப்படும் என நினைக்கிறேன். மைதான ஊழியர் ஒருவர் என்னிடம் சொன்னார். ஆடுகளத்தில் மீண்டும் தண்ணீரை ஊற்ற வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

எனவே நான் கொஞ்சம் காத்திருந்து அதன் பிறகு கணிக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன். ஆனால் முதல் நாளில் பந்து பெரிய அளவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். எங்களுக்கு முன் என்ன இருக்கிறதோ அதை பொறுத்து தான் நாம் விளையாட வேண்டும். நாங்கள் இந்த தொடர் முழுவதும் பெரிய இலக்கை எட்டவே இல்லை. இந்தியா மட்டும் முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா அடித்த சதத்தால் 400 ரன்கள் எட்டியது. மேலும் 400 ரன்கள் அடித்தால் அது அணியின் வெற்றிக்கு உதவும் என்பதை நாம் முன்பே பார்த்து விட்டோம்.

இந்த ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. முதல் பந்திலேயே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படாது. ஆனால் வறண்ட வானிலை நிலவுவதால் போட்டி செல்ல செல்ல ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். எனவே முதலில் களம் இறங்கி பெரிய இலக்கை எட்டினால் அது நிச்சயம் அணிக்கு சாதகமான விஷயமாக அமையும். சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் 200 ரன்களை அடித்தாலே அது கௌரவமான இலக்காக பார்க்கப்படுகிறது. இதனால் நாங்கள் இலக்கை நிர்ணயிப்பது குறித்து எந்த குழப்பமும் அடையவில்லை.

ஆடுகளம் குறித்து நாங்கள் எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் களத்திற்கு சென்று விளையாடுவோம். இது போன்ற ஆடுகளத்தில் விளையாடுவது என்னை பொறுத்தவரை குஷியாகவே இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு பந்திலும் எதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும். ரன் குவிப்புக்கு சாதகமான தார் சாலை போல் அமைக்கப்படும் ஆடுகளத்திற்கு பதில் இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் விளையாடவே நான் விரும்புகிறேன். கடந்த மூன்று டெஸ்ட் போட்டியிலும் ஏதேனும் ஒரு வீரர் 70 அல்லது 80 ரன்கள் அடித்தாலே நாம் ஆட்டத்தை வெல்ல முடிந்தது.

ஆனால் இந்த ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஏதேனும் ஒரு வீரர் பெரிய ஸ்கோரை அகமதாபாத் டெஸ்டில் அடிக்க வேண்டும். அப்போதுதான் 200, 250 என்ற சாதாரண ஸ்கோரை விட 450 என்ற இலக்கை எட்ட முடியும். இருப்பினும் நான் முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். சவாலான ஆடுகளங்கள் அதிவேகமாக 30 ரன்கள் அடித்தாலே போட்டியின் சூழல் முற்றிலும் மாறி விடுகிறது. ஸ்ரேயாஸ் கூட கடைசி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் அப்படித்தான் விளையாடினார். அது போன்ற சிறிய சிறிய பங்களிப்பு சவாலான ஆடுகளத்தில் நிச்சயம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை