நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள ஓவால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. நட்சத்திர வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியதால், ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்ததுடன் முதல் விக்கெட்டிற்கே 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “எங்களின் சிறந்த நாள்களில் ஒன்றாக இன்று இல்லை. அவர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள், ஆனாலும் நாங்கள் பேட்டிங்கில் இன்று சிறப்பாக செயல்பட்டு ரன்களைச் சேர்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் பந்து கொஞ்சம் சீம் ஆனது போல் இருந்தது. அதனால் நாங்கள் ஃபீல்டர்களை அருகில் வைத்து எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது ஏதும் நடக்கவில்லை. அடுத்த போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் அணியை வழிநடத்தவுள்ளார். அதை நான் அவரிடமே விட்டுவிடுகிறேன். மேலும் அவருக்கு உள்ள போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளது. எதிவரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஒருவாரம் மட்டுமே உள்ளதால், அதற்கான பயிற்சி அமர்வுகள் தேவை. அதனால் இப்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மனம் ஏங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.