ரஞ்சி கோப்பை 2022: அரையிறுதிக்கு முன்னேறிய பெங்கால் அணி!
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் அணி இதுவரை ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை.
காலிறுதிச் சுற்றில் நான்காம் நாளன்று மூன்று ஆட்டங்களின் முடிவு தெரிந்த நிலையில் பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 5ஆம் நாளுக்குச் சென்றது.
உத்தரகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை உத்தரப் பிரதேச அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை மத்தியப் பிரதேச அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டத்தில் 4ஆம் நாள் இறுதியில் பெங்கால் அணி 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 551 ரன்கள் முன்னிலை பெற்றது.
கடைசி நாளில் பெங்கால் அணி 2-வது இன்னிங்ஸில் 85.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மனோஜ் திவாரி 136 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் பெங்கால் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இதையடுத்து அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூரில் ஜூன் 14 அன்று நடைபெறுகின்றன. இதில் பெங்கால் அணி மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது.
அரையிறுதிச் சுற்றில் மோதும் அணிகள்
- மும்பை vs உத்தரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம் vs பெங்கால்