இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம் - மிட்செல் சான்ட்னர்!

Updated: Tue, Nov 14 2023 19:30 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் சொந்த மண்ணில் நடைபெற்ற லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் 9 வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்த இந்தியா வெற்றிவாகை சூடி இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இருப்பினும் உலகின் மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் கூட ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே நியூசிலாந்து அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2000 சாம்பியன்ஸ் கோப்பை  இறுதிப்போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இதுவரை சந்தித்த 3 ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதி ஜடேஜா மற்றும் தோனி ஆகியோருடைய போராட்டத்தை தாண்டி இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களால் இன்னும் மறக்க முடியவில்லை. இருப்பினும் இதே உலகக்கோப்பையின் லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து நியூஸிலாந்தை ஐசிசி தொடரில் இந்தியா தோற்கடித்தது போல் நிச்சயம் இறுதிப்போட்டி அரையிறுதி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி போன்ற டாப் வீரர்களின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தத்தை அரையிறுதி சுற்றில் குறைக்க முயற்சிப்போம் என்று நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆரம்பத்திலேயே ரோஹித் போன்ற முக்கிய வீரர்களை அவுட்டாக்கி தோனியை ரன் அவுட் செய்து இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தியது போல் இம்முறையும் செய்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் குண்டு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதியை நாங்கள் கேட்போம் என்று நம்புகிறேன். அதை செய்தால் நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம் என்று அர்த்தமாகும். அவர்களுடைய டாப் 6 – 7 பேட்ஸ்மேன்கள் எந்தளவுக்கு அடித்து நொறுக்கக் கூடியவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அது போன்ற அதிரடியான வீரர்களை மெதுவாக விளையாட வைப்பதற்கு விக்கெட்டுகளை எடுப்பது மட்டுமே ஒரே வழியாகும்.

எனவே அது வெற்றியில் முக்கிய பங்காற்றும். 2019 போட்டி நம்ப முடியாததாக இருந்தது. குறிப்பாக ஆரம்பத்திலேயே நல்ல துவக்கத்தை பெற்றது ரசிகர்களை அமைதிப்படுத்தியது. இருப்பினும் தோனி எனக்கு மேல் அடித்த சிக்சர் காட்டுத்தனமாக இருந்தது. அதனால் அவர் வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று இந்திய ரசிகர்கள் நம்பினர். ஆனால் கப்டில் சரியான நேரத்தில் ரன் அவுட் செய்ததால் இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்தினோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை