ஸ்டார்க் தம்பத்திக்கு வாழ்த்து தெரிவித்த ஐசிசி!
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
ரேச்சல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலிசா ஹீலி சதம் அடித்து அசத்தினார். அவர் 138 பந்துகளில் 170 ரன்கள் குவிதார். இதில் 26 பவுண்டரிகள் அடங்கும். பெத் மூனி 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி, உலகக்கோப்பையை தனதாக்க 357 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாட தொடங்கியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய டாமி பியூமான்ட் 27 ரன்களிலும் வ்யாட் 4 ரன்களிலும் வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹீத்தர் நைட் 26 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
அதே நேரத்தில் சிறப்பாக விளையாடிய நாட் ஸ்கைவர் சதம் அடித்து அசத்தினார். ஒரு முனையில் அவர் அதிரடி காட்டினாலும் மறுமுனையில் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. இறுதியில் இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
நாட் ஸ்கைவர் 148 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பை சாம்பியன் பட்டதை தட்டி சென்றது.
12ஆவது முறையாக நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை தொடரில் 7ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி, ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மிச்சேல் ஸ்டார்க் அவர்களின் மனைவி ஆவார்.
இந்த போட்டியை காண இன்று மிச்சேல் ஸ்டார்க் மைதானத்திற்கு வருகை தந்து இருந்தார். போட்டி முடிந்த பிறகு மிட்செல் ஸ்டார்க், அலிசா ஹீலி ஆகியோர் உலகக்கோப்பை உடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆண்கள் அணி உலகக்கோப்பையை வென்ற போது அந்த உலகக்கோப்பையுடன் மிட்செல் ஸ்டார்க், அலீசா ஹீலி இருக்கும் புகைப்படத்தையும் , இன்று இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.