பகலிரவு டெஸ்ட்: அசைக்க முடியா சாதனைப் படைத்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்டாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 473 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களிலேயே ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சகாம டேவிட் மாலன் 80 ரன்களையும், கேப்டன் ஜோ ரூட் 62 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் தனது 50ஆவது விக்கெட்டை எடுத்தார்.
இதன்மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார். 9 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 18.11 ஆவரேஜுடன் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 3 முறை ஐந்து விக்கெட்டுகளையும் எடுத்தார்.