இந்த ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அபிஷேக் போரல் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களையும், கேஏல் ராகுல் 2 பவுண்ட்ரி, 2 சிக்சர்களுடன் 38 ரன்களையும், கேப்டன் அக்ஸ படேல் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நிதீஷ் ரானா ஆகியோர் அரைசதம் கடந்ததுடன் தலா 51 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியாக தொடங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் காயம் காரனமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் ராஸ்தான் ராயல்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
இதனையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 4 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “என்னுடைய காயம் காரணமாக என்னால் திரும்பி வந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இப்போது நன்றாக இருக்கிறது. இருப்பினும் எனது காயம் குறித்து முழு தகவலும் நாளை தான் தெரியவரும். மருத்துவ பரிசோதனையின் முடிவில் அது எவ்வாறு உள்ளது என்பது குறித்து பார்ப்போம். இன்று நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
எங்கள் பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மைதானத்தில் இருந்த ஆற்றல் அருமையாக இருந்தது. எங்கள் பேட்டிங் வரிசையைக் கொண்டு நாங்கள் இந்த ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும். பவர்பிளேயில் நாங்கள் பெற்ற தொடக்கம், நிச்சயமாக இதனை ஒரு எளிதான ஸ்கோராக காட்டியது. ஆனால் மிட்செல் ஸ்டார்க் தனது அபாரமான பந்துவீச்சின் காரணமாக எங்களின் வெற்றியை பறித்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.