எம்எல்சி 2023: நியூயார்க்கை வீழ்த்தி சான்பிரான்ஸிகோ அபார வெற்றி!
அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லிக் போட்டியில் எம்ஐ நியூயார்க் - சான்பிரான்ஸிகோ யுனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சான்பிரான்ஸிகோ அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சான்பிரான்ஸிகோ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மேத்யூ வேட், ஃபின் ஆலன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கோரி ஆண்டர்சன் - ஷதாப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சான்பிரான்ஸிகோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 91 ரன்களையும், ஷதாப் கான் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 61 ரன்களையும் சேர்த்தனர். எம்ஐ அணி தரப்பில் ட்ரண்ட் போல்ட், காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஸ்டீவ் டெய்லர், மொனாக் படேல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டெவால் பிரீவிஸ் - நிக்கோலஸ் பூரன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர்.
பின் பிரீவிஸ் 32 ரன்களுக்கும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கிரேன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி,4 சிக்சர்கள் என அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களைச் சேர்த்தார்.
இருப்பினும் எம்ஐ நியூயார்க் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சான்பிரான்ஸிகோ அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது.