எம்எல்சி 2023: சதமடித்த கிளாசன்; நியூயார்க்கை வீழ்த்தியது சியாட்டில்!
அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை எதிர்த்து எம்ஐ நியூயார்க் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாச் வென்ற சியாட்டில் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணியில் மொனான்க் படேல் 2, ஷயான் ஜஹாங்கீர் 19, அசாம் 2 ரன்கள் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் நிக்கோலஸ் பூரன் - கேப்டன் பொல்லார்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் அரைசதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் எம்ஐ நியூயார்க் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 68 ரன்களையும், பொல்லார்ட் 34 ரன்களையும், ட்ரெண்ட் போல்ட் 20 ரன்களையும் சேர்த்தனர். சியாட்டில் தரப்பில் இமாத் வாசிம், ஹர்மீத் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சியாட்டில் அணியில் குயின்டன் டி காக் 9 ரன்களுக்கும், ஜெயசூர்யா ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த நௌமன் அன்வர் - ஹென்ரிச் கிளாசன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின் 51 ரன்களில் நௌமன் அன்வர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் ரஞ்சனே, கேப்டன் தசுன் ஷனகா, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஆனால் மறுபக்கம் தனது அதிரடியைக் கைவிடாத ஹென்ரிச் கிளாசன் 41 பந்துகளில் சதமடித்து, இத்தொடரில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை தன்வசப்படுத்தினார்.
அதன்பின் இறுதிவரை களத்தில் இருந்த கிளாசன் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 110 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சியாட்டில் ஆர்காஸ் அனி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதமடித்த ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.