இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள அமீர்!
பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முகமது ஆமிர். 29 வயதாகும் இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து எற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், கடந்த வருடம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் உள்ளவர்கள் மனதளவில் தொந்தரவு கொடுப்பதாக குற்றம்சாட்டி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளார். இவரது குடும்பமும் இங்கிலாந்தில்தான் உள்ளன. இந்நிலையில் இவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுவிட்டால், ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடைவிதித்துள்ளது.
இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் மெஹ்மூத் இங்கிலாந்து குடியுரிமை பெற்று, ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பஞ்சாப் கிங்ஸ்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதேபோல் முகமது ஆமிருக்கும் வாய்ப்புள்ளது.
கிரிக்கெட் விளையாடுவது குறித்து முகமது ஆமிர் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில், இங்கிலாந்தில் தங்க காலவரையின்றி அனுமதி பெற்றுள்ளேன். அந்த நாட்களில் என்னுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக அனுபவிப்பேன். இன்னும் 6 முதல் 7 வருடங்கள் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஆனால் இந்த விஷயம் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும்.
என்னுடைய குழந்தைகள் இங்கிலாந்தில் வளரும். அவர்கள் அங்குதான் கல்வி கற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் போதுமான நேரத்தை அங்கு செலவழிப்பேன். எதிர்காலத்தில் இங்கிலாந்து குடியுரிமை கிடைத்தபின், எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் ’’ என்றார்.