இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Updated: Mon, Sep 12 2022 22:21 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல்ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகியிருந்த ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும், அவருக்கு மாற்றாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.

டி20 உலக கோப்பை அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் , தினேஷ் கார்த்திக் , ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சாஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஸ்குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். இதில் மாற்றுவீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் அறிவிப்பு வந்த உடனேயே, முகமது ஷமி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரின் பெயர்களும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன. ரசிகர்களால் அதிகம் விரும்பப்படக் கூடிய இந்த இரண்டு வீரர்களும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஷமி குஜராத் டைட்டான்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்.

அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றதில் சஞ்சு சாம்சனின் பங்கு அளப்பறியது. ஸ்டாண்ட் பை வீரர்களின் பட்டியலில் ஷமியின் பெயர் இடம்பெற்றிருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு ரோஹித் சர்மா துரோகம் இழைத்துவிட்டார் என நெட்டிசன் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர்வாசி, ''சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எந்தப் போட்டியிலும் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. டி20 உலகக் கோப்பை அணியிலும் இல்லை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களிலும் கூட இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது'' என ஆதங்கப்பட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை