அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி சாதனை!

Updated: Wed, Nov 15 2023 22:10 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கில் கூட்டணி சிறப்பான ஓப்பனிங் தந்தது. வாண வேடிக்கை  காட்டிய ரோகித் சர்மா 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 47 ரன்களில் அவுட் ஆக,  கில் 80 ரன்கள் குவித்தார்.

அதன்பின் 3ஆவதாக களமிறங்கிய விராட் கோலி நிலையாக நின்று விளையாடி சதம் அடித்தார்.  ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முறையாக 50ஆவது சதம் அடித்து சாதனை படைத்த அவர், 117 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுபுறம் அபாரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், 70 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். கேஎல் ராகுலும் தன் பங்குக்கு 39 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 397 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கைத் தொடங்கி விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தி அசத்தினார். 33 ஆவது ஓவரின்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் வெறும் 17 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் முகமது ஷமி.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை முகமது ஷமி பாடைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் உலகக்கோப்பை தொடர்களில் 19 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்து வந்தது. அதனை இன்று முகமது ஷமி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை