ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்ற முடிந்த நிலையில், இப்போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டி முடிந்து பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, சில ரசிகர்கள் வீரர்கள் குறித்து தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையெல்லாம் கேட்ட குஷ்தில் ஷா தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். மற்ற வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் குஷ்தீல் ஷாவை தடுக்க முயன்ற நிலையிலும், அவர் ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
அதன்பின் பாதுகாப்பு அதிகாரிகள் ரசிகரையும் குஷ்தீல் ஷாவையும் அழைத்துச் சென்றனர். இருப்பினும் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறுவதைக் காணலாம். இந்நிலையில் ரசிகர்களுடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் மோதலில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரும் ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரைஸ் மாரியூ அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அவர் 58 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெலும் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 37 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 33 மற்றும் தயப் தாஹிர் தலா 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 221 ரனகளில் ஆல் அவுட்டானது.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பென் சீயர்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை மைக்கேல் பிரேஸ்வெல்லும், தொடர் நாயகன் விருதை பென் சீயர்ஸூம் கைப்பற்றினர்.